ஆற்காட்டில் கோவில் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் ஐம்பொன் சிலை திருட்டு
ஆற்காட்டில் கோவிலின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கானார் பஜனை கோவில் தெருவில் சத்தியபாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி பஜனை கோவில் உள்ளது. இந்த கோவில் 1936-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
தினமும் காலையில் அர்ச்சகர் ராஜேஷ் இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறார். மாலையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் வழக்கம்போல் கோவில் பூட்டப்பட்டது. நேற்று காலை அர்ச்சகர் ராஜேஷ் வந்தார். கோவிலில் உள்ள முன்பக்க சுற்றுச்சுவர் கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றார்.
அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கிரில்கேட்டில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த சத்தியபாமா, ருக்மணி சாமிகளுக்கு நடுவில் இருந்த 3½ அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேணுகோபால் சுவாமி சிலை திருட்டு போயிருந்தது. அதனுடன் இருந்த சத்தியபாமா, ருக்மணி சிலைகள் அப்படியே இருந்தன.
திருட்டுப் போன வேணுகோபால் சுவாமி ஐம்பொன் சிலையின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து சிலையை திருடிச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்துஅறங்காவலர் குழு தலைவர் ஏ.வி.டி. சரவணனுக்கு அர்ச்சகர் ராஜேஷ் தகவல் அளித்தார். மேலும் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கோவில் சிலையை திருட வந்த நபர்கள் கோவில் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்து பூட்டை உடைத்து திருடியுள்ளனர். பின்னர் வேணுகோபால் சுவாமி சிலையை சுற்றுச்சுவர் மீது வைத்து வெளியில் எடுத்துச் சென்றுள்ளனர். உடைக்கப்பட்ட பூட்டை சுற்றுச்சுவருக்கு வெளியிலும், மற்றொரு பூட்டை கால்வாய்க்குள்ளும் வீசி விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீடுகள் நிறைந்த பகுதியில் சுவாமி சிலை திருட்டு போயிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story