திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 19 Jan 2020 10:15 PM GMT (Updated: 19 Jan 2020 4:59 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதாலும், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் அய்யப்ப பக்தர்கள், மேல் மருவத்தூருக்கு செல்லும் பக்தர்களும் கோவிலுக்கு அதிகம் வந்தனர்.

போலியோ சொட்டு மருந்து நேற்று மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

இதில் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தீர்த்தவாரி விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை கோவிலில் இருந்து உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி தென்பெண்ணையாற்றுக்கு நேற்று அதிகாலை புறப்பாடு நடந்தது.

அப்போது வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு மண்டகப்படி செலுத்தினர். தொடர்ந்து மாலையில் தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரியில் சாமி எழுந்தருளினார். தொடர்ந்து தீா்த்தவாரி முடிந்ததும் இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சாமி கோவிலுக்கு திரும்புகிறார். அப்போது வழிநெடுகிலும் உள்ள கிராம மக்கள் சாமிக்கு மண்டகப்படி செலுத்துவார்கள்.

Next Story