உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க 6 நாள் பயணம் எடியூரப்பா சுவிட்சர்லாந்து புறப்பட்டார்


உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க 6 நாள் பயணம் எடியூரப்பா சுவிட்சர்லாந்து புறப்பட்டார்
x
தினத்தந்தி 20 Jan 2020 5:00 AM IST (Updated: 19 Jan 2020 10:53 PM IST)
t-max-icont-min-icon

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற் பதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா 6 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார்.

பெங்களூரு, 

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற் பதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா 6 நாள் சுற்றுப்பயணமாக நேற்று சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசித்ததாக நிருபர்களிடம் கூறினார்.

எடியூரப்பா புறப்பட்டார்

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா 6 நாள் சுற்றுப் பயணமாக சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டார். அவர் நேற்று காலை 10.30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அவர் துபாய்க்கு சென்று அங்கிருந்து வேறு ஒரு விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு செல்கிறார்.

அவருடன் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், தொழில்துறை முதன்மை செயலாளர் கவுரவ்குப்தா, முதல்-மந்திரியின் செயலாளர் செல்வக்குமார் உள்பட அதிகாரிகள் குழுவினரும் சென்றுள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்வதற்கு முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம்

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க செல்கிறேன். அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து விவாதிக்க உள்ளேன். இதன் மூலம் கர்நாடகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினேன்.

இந்த ஆலோசனையின்போது அமித்ஷா சாதகமான பதிலை கூறினார். நான் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு கா்நாடகம் திரும்பியதும், ஓரிரு நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்ட எடியூரப்பா வருகிற 24-ந்தேதி பெங்களூரு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

கோட்-சூட்

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் உள்பட பல்வேறு மந்திரிகள் மற்றும் கட்சியினர் எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். எடியூரப்பா எப்போதும் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பேண்ட் தான் அணிவார். ஆனால் வெளிநாடு பயணம் என்பதால் வெள்ளை சட்டை அணிந்து கோட்-சூட் மற்றும் ‘ஷூ’ அணிந்திருந்தார்.

Next Story