மந்திரிசபை விரிவாக்கத்திற்கு காலதாமதம் ஏற்படாது துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் இனி காலதாமதம் ஏற்படாது என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் இனி காலதாமதம் ஏற்படாது என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மனிதநேயம்
பெலகாவி பிரச்சினையில் மராட்டிய மாநிலம் அடிக்கடி பிரச்சினை செய்கிறது. அங்குள்ள மக்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுகிறது. அரசியல் நோக்கத்திற்காக இத்தகைய முயற்சியை அந்த மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் செய்கின்றன. கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினைக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தை மீண்டும், மீண்டும் எழுப்புவது தேவையற்றது.
இத்தகைய விஷயங்களை கைவிட்டுவிட்டு அந்த மாநிலம் நல்ல பணிகளை செய்தால் நன்றாக இருக்கும். சிவசேனாவை சேர்ந்த சஞ்சய்ராவத் விஷயம் தெரிந்த நபர். இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி மலிவான முறையில் நடந்து கொண்டு, நற்பெயரை கெடுத்து கொள்ளக்கூடாது. மனிதநேயம் மற்றும் நல்ல பணிகளை செய்வதற்கு எல்லை எதுவும் இல்லை.
அமைதியை கெடுக்கக்கூடாது
கர்நாடகம் மற்றும் மராட்டிய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி, சமூகத்தில் நிலவும் அமைதியை கெடுக்கக்கூடாது. வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகளை கைவிட வேண்டும். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அமித்ஷாவுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
எடியூரப்பா பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கர்நாடகம் திரும்பியதும், டெல்லிக்கு சென்று மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசித்து முடிவு செய்வார். மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் இனி காலதாமதம் ஏற்படாது. துணை முதல்-மந்திரி பதவிைய ரத்து செய்வது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story