அமித்ஷாவின் சவாலை ஏற்கிறோம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விவாதத்திற்கு தயார் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பேட்டி
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விவாதத்திற்கு தயார் என்றும், அமித்ஷாவின் சவாலை ஏற்பதாகவும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.
பெங்களூரு,
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விவாதத்திற்கு தயார் என்றும், அமித்ஷாவின் சவாலை ஏற்பதாகவும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூரு மற்றும் உப்பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். அவர் கர்நாடகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசவில்லை. சரக்கு-சேவை வரி திட்டத்தில் கர்நாடகத்திற்கு வரவேண்டிய பங்கு தொகை, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசவில்லை.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பகிரங்க விவாதத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயாரா? என்று அமித்ஷா சவால் விட்டுள்ளார். அமித்ஷாவின் இந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பா.ஜனதா தலைவர்களில் யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக உள்ளோம். விதான சவுதா வளாகத்தில் விவாதம் நடைபெறட்டும். அதில் பங்கேற்க நாங்கள் தயார்.
நாட்டிற்காக தியாகம்
ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் இல்லை என்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கூறியுள்ளார். ஆம் அது உண்மை தான். மோடியை போல் ராகுல் காந்தி அதிக விலை மதிப்புடைய ஆடைகளை அணிவது இல்லை. மோடியை போல் ராகுல் காந்தி பொய் பேசுவது இல்லை. ராகுல் காந்தி ஒரு தனி நபர் அல்ல. அவர் காங்கிரஸ் கட்சியின் பலம். ராமச்சந்திர குஹா, நாட்டிற்காக தியாகம் செய்த குடும்பத்தை பற்றி தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு வி.எஸ்.உக்ரப்பா கூறினார்.
Related Tags :
Next Story