பெங்களூருவில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் கொலை காரில் கடத்தி தீர்த்து கட்டிய மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
கள்ளத்தொடர்பு விவகாரத்தில், தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில், தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி சென்று ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
பெங்களூரு கமர்சியல்தெரு அருகே ஜூவல்லரி லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் அப்துல் மசீன்(வயது 28). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே வைத்து அப்துல் மசீனை சிலர் காரில் அழைத்து சென்றனர். ஆனால் அவர் நள்ளிரவு வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்துல் மசீனை, அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி சிவாஜிநகர் போலீசில் அப்துல் மசீனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்பேரில், அப்துல் மசீனை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையில், நேற்று காலையில் பாகலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காடுசன்னப்பனஹள்ளி பகுதியில் ஒரு வாலிபர் உடல் கிடந்தது. அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த பாகலூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஜூவல்லரி லே-அவுட்டை சேர்ந்த அப்துல் மசீன் என்றும், மர்மநபர்கள் அவரை ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்திருந்ததும் தெரியவந்தது.
கள்ளத்தொடர்பு
அதாவது நேற்று முன்தினம் மாலையில் கமர்சியல்தெருவில் இருந்து மர்மநபர்கள் அப்துல் மசீனை, பாகலூருக்கு காரில் கடத்தி வந்ததும், பின்னர் காடுசன்னப்பனஹள்ளியில் வைத்து ஆயுதங்களால் தாக்கி அவரை படுகொலை செய்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அப்துல் மசீனுக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அப்துல் மசீனுக்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று கூறி மர்ம நபர்கள், அப்துல் மசீனை காரில் அழைத்து சென்றதும், அங்கு வைத்து அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
விசாரணைக்கு பின்பு அப்துல் மசீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story