மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:00 PM GMT (Updated: 19 Jan 2020 6:21 PM GMT)

கரூர் மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பொருட்டு முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி கரூர் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் நேற்று காலை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது அவர், அங்கு வந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தினை பொறுத்த வரையில் 831 மையங்களில் (கூடுதல் மையங்கள் உட்பட) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. இதில் 1,13,854 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதில், கிராமப்பகுதியில் 736, நகராட்சிப்பகுதியில் 95 சொட்டு மருந்து மையங்கள் செயல்பட்டது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தேர்வு செய்யப்பட்ட சில இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் தனியார் குழந்்தைகள் மருத்துவமனைகள் ஆகியவை சொட்டு மருந்து மையங்களாக செயல்படுகின்றன. வெளியூர் பயணம் செய்யும் மக்களும் பயன்பெற ஏதுவாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் ஜனவரி 19-ந்தேதி முதல் 3 தினங்களுக்கு இடைவிடாமல் 24 மணிநேரமும் செயல்படும்.

3,360 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணவாசி மற்றும் வேலஞ்செட்டியூர், சுங்க வரி வசூல் (டோல்கேட்) செய்யும் இடங்களில் இரண்டு சிறப்பு சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு பஸ் மற்றும் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமில் பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புக்களை சேர்ந்த பணியாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் போன்ற துறைகளைச் சார்ந்த சுமார் 3,360 பேர்கள் முகாம்் பணியில் பங்கேற்றனர். இங்குள்ள குழந்தைகளுடன் இடம் பெயர்வோர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக தற்காலிகமாக குடி வந்தோர் தங்கியுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளிலும் ஒரு குழந்தை கூட விடுபடாமல் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

வருகிற 25-ந்தேதி வரை...

இந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இதற்கு முன் எத்தனை தடைவ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இச்சொட்டு மருந்து கூடுதல் தவணையாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. சமுதாயத்திலிருந்தே போலியோ நோய்க் கிருமியை இல்லாமல் செய்வதே இந்த திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கீதா எம்.எல்.ஏ., திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.செல்வக்குமார், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, நகர் நல அலுவலர் ஸ்ரீபிரியா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என்.தானேஷ் என்கிற முத்துக்குமார், நகர செயலாளர்கள் நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் மார்கண்டேயன், கூட்டுறவு சங்கப்பிரதிநிதி கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டை அருகே கள்ளப்பள்ளி ஆரம்ப துணை சுகாதார வளாகத்தில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பஞ்சப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஷகீலா தலைமை தாங்கினார். கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவர் சந்திரமதி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். இதில் கள்ளப்பள்ளி ஆதிதிராவிடர் காலனி, கொடிக்கால் தெரு,கடைவீதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றப்பட்டது. இதில் கள்ளப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் கோமதிகண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் பொன்னி ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கள்ளப்பள்ளி ஊராட்சி மன்ற செயலர் லட்சுமணன் செய்திருந்தார்.

குளித்தலை

குளித்தலையில் நேற்று போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) புகழேந்தி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர் அமிர்தீன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் இஸ்மாயில், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். குளித்தலை நகராட்சி சார்பில் 13 இடங்களில் போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. 

Next Story