கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் 28-ந்தேதி பயன்பாட்டுக்கு வருகிறது


கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் 28-ந்தேதி பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 19 Jan 2020 10:45 PM GMT (Updated: 19 Jan 2020 6:23 PM GMT)

கரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் தயார் நிலையில் உள்ளது. வருகிற 28-ந்தேதி ரெயில்வே அதிகாரி ஆய்வின்போது அவை பயன்பாட்டுக்கு விருகிறது.

கரூர்,

கரூர் ரெயில் நிலையத்தின் செயல்பாடு உள்ளிட்டவை பற்றி வருகிற 28-ந்தேதி, தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டு 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை கணினி திரையில் பார்வையிட ஏதுவாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கரூர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக நடைமேடையில் இயங்கும் வகையிலான பேட்டரி கார் தயார் நிலையில் உள்ளது.

பொழுதுபோக்கு பூங்கா

மேலும் ரெயில்வே குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்- சிறுமிகள் விளையாடும் விதமாக பூங்கா பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கரூர் ரெயில் நிலைய தண்டவாளங்களில் கடந்த சில வாரங்களாகவே பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்களை கொட்டி புனரமைத்தல், கட்டிடத்தில் சேதமடைந்த பகுதியில் பூச்சு வேலையினை மேற்கொள்ளுதல், ரெயில் நிலையத்தின் முன்புற சாலையில் சீரமைப்பு பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை வருகிற 24-ந்தேதி சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்ய இருக்கிறார். அதன் பிறகு 28-ந்தேதி தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு மேற்கொண்டு பேட்டரி கார் மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story