சிறையில் இருந்து செல்போனில் பேசிய கைதி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் புதுவையில் பரபரப்பு
கவர்னர் மாளிகை, ரெயில் நிலையத்திற்கு காலாப்பட்டு சிறையில் இருந்தபடி செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
கவர்னர் மாளிகை, ரெயில் நிலையத்திற்கு காலாப்பட்டு சிறையில் இருந்தபடி செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு?
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா நகரமாக திகழ்கிறது. வார இறுதிநாட்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமெனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைப்பகுதிகளில் புதுச்சேரிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 1 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய நபர் புதுச்சேரி கவர்னர் மாளிகை மற்றும் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனடியாக இதுகுறித்து பெரியகடை, ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அதிரடி
இதைத்தொடர்ந்து பெரியகடை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கவர்னர் கிரண்பெடியும் இருந்தார். கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. போலீசார் கவர்னர் மாளிகை முழுவதும் அங்குலம் அங்குலமாக அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல் ரெயில் நிலையத்திலும் ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருந்த ரெயில்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. ஆனால் இதிலும் எதுவும் சிக்கவில்லை.
மிரட்டல் விடுத்த சிறை கைதி
இந்தநிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இருந்து அழைப்பு வந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த மாதம் (டிசம்பர்) 11-ந் தேதி கார் திருட்டு வழக்கில் பெரியகடை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்த நித்தீஸ்சர்மா (வயது33) என்பவர் தான் செல்போன் மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது அம்பலமானது.
புதுவை கவர்னர் மாளிகை, ரெயில் நிலையத்துக்கு மட்டுமின்றி தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் ஆகியவற்றுக்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது.
செல்போன் கிடைத்தது எப்படி?
இதுதொடர்பாக பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே காலாப்பட்டு சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைதிகளின் அறைகளில் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகளை கைப்பற்றினார்கள். இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி நித்தீஸ் சர்மாவுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறையில் இருந்தபடி கைதி ஒருவர் போலீசில் தொடர்பு கொண்டு செல்போன் மூலம் கவர்னர் மாளிகை, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story