அரசு பள்ளி மாணவர்களுக்கு ரங்கோலி-பட்டம் தயாரிக்கும் போட்டிகள்
புதுவை கடற்கரை சாலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ரங்கோலி மற்றும் பட்டம் தயாரித்தல் போட்டிகள் நடந்தன.
புதுச்சேரி,
புதுவை கடற்கரை சாலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ரங்கோலி மற்றும் பட்டம் தயாரித்தல் போட்டிகள் நடந்தன.
வானவில்-2020
புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம், சமகர சிக்ஷா சார்பில் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் உதவியுடன் வானவில்-2020 (ரங்கோட்சவ்) நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டம் பறக்கவிட்டு போட்டிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ஜான்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பட்டம் செய்தல்
அதைத்தொடர்ந்து போட்டிகள் நடந்தன. மாணவிகளுக்கு குறிப்பிட்ட அளவில் இடங்கள் ஒதுக்கி அதில் ரங்கோலி வரைந்தனர். எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள், 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாக பட்டங்கள் தயாரிக்கும் போட்டிகள் நடந்தன. வண்ண காகிதங்களால் பலவிதமான வடிவங்களில் பட்டங்களை மாணவர்கள் அழகுற தயாரித்தனர். இதேபோல் கைவினை பொருட்கள் செய்யும் போட்டியும் நடந்தது. இந்த போட்டிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை என தனித்தனி பிரிவுகளில் நடந்தது. பிளாஸ்டிக், ஐஸ்கிரீம் குச்சிகள், பழைய காகிதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி விதவிதமான பொருட்களை மாணவ, மாணவிகள் செய்து குவித்தனர்.
அரங்குகள்
அதுமட்டுமின்றி தற்காப்பு கலைகள், சிலம்பாட்டம், இசைக்குழு அணிவகுப்பு, நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வி தொடர்பான அரங்குகள், சாலை பாதுகாப்பு, சத்துணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஜவகர் சிறுவர் இல்ல குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story