பாகூர் அருகே விபத்து; மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; டிரைவர் பலி ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததால் பரபரப்பு


பாகூர் அருகே விபத்து; மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; டிரைவர் பலி ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

பாகூர், 

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். உடலை எடுத்துசெல்ல ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

விபத்து

கடலூரை அடுத்த சாவடி வண்ணான்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தூக்கனாம்பாக்கம் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். குருவிநத்தம் தூக்குபாலம் அருகே சென்ற போது எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் முருகனின் உடல் நடுரோட்டில் கிடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் முருகனின் உடலை விபத்து ஏற்படுத்திய லாரியிலேயே ஏற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறினர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆம்புலன்ஸ் வரதாமதம் ஆனதால் விபத்து நடந்த இடத்தில் போலீசாருடன் பொது மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

விசாரணை

இதனையடுத்துஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது. டிரைவர் இல்லாததால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. பின்னர் முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் இருந்தும் டிரைவர் இல்லாததால் தான் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து விரைவில் டிரைவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story