சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை : 14 சோதனைச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு


சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை : 14 சோதனைச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 3:45 AM IST (Updated: 20 Jan 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 14 சோதனைச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் முள்ளி, கோபநாரி, மாங்கரை, ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், நடுப்புனி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், மீனாட்சிபுரம், செம்மனாம்பதி, மலுக்குப்பாறை உள்பட 14 சோதனைச் சாவடிகள் உள்ளன.

இந்த சோதனைச்சாவடிகளில் வாளையாறு, ஆனைகட்டி, மாங்கரை சோதனை சாவடிகளில் மட்டுமே ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மற்ற சோதனை சாவடிகளில் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரமும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் துப்பாக்கியுடன் கண்காணிப்பு பணியில் இருக்க உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போது போலீசாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை வந்தால், உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல் துப்பாக்கி சூடு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் வருகிறதா? என்று போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story