சர்வர் பிரச்சினையால் ஒத்திவைப்பு - வங்கி தேர்வு எழுத முடியாதவர்கள் போராட்டம்


சர்வர் பிரச்சினையால் ஒத்திவைப்பு - வங்கி தேர்வு எழுத முடியாதவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2020 4:01 AM IST (Updated: 20 Jan 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

சர்வர் பிரச்சினையால் ஆன்லைனில் வங்கி தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து விண்ணப்பித்து இருந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலூர், 

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு வங்கிப்பணியாளர் தேர்வு மையத்தின் சார்பில் நேற்று மேலூர் அருகே உள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தினுள் 3 கட்டிடங்களில் வெவ்வேறு இடங்களில் 500 விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு எழுத தயாரானார்கள்.

தேர்வு மைய ஊழியர்கள் அவர்கள் கொண்டு வந்த மடிக்கணினிகள் மூலமாக மும்பையில் உள்ள மெயின் சர்வரில் இணைப்பு கொடுத்து வெளியான கேள்விகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆன்லைனில் பதில் எழுத கூறினர்.

கல்லூரி வளாகத்தில் 2 கட்டிடங்களில் இருந்த தேர்வு மையங்களில் கேள்விகள் வெளியாகி தேர்வு தொடங்கியது. அப்போது ஒரு கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்த 150 கணினிகளுக்கு மெயின் சர்வருடன் இணைப்பு கொடுப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு தயாராக இருந்த 150 விண்ணப்பதாரர்கள் மட்டும் தேர்வு எழுத முடியவில்லை.

இதனால் அவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும், மறுதேர்வு விவரம் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொலைதூரத்தில் இருந்தும் பெற்றோருடன் வந்த பெண்கள் உள்பட 150 பேரும் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறி அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தேர்வு எழுத முடியாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Next Story