ரிட்டன் டிக்கெட்டுக்கு அனுமதி மறுப்பு: கப்பலூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
கப்பலூர் சுங்கச்சாவடியில் ரிட்டன் டிக்கெட்டுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்துவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
திருமங்கலம்,
நாடு முழுவதும் கடந்த 15-ந் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதேபோல் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் 3 முதல் 8 வரை உள்ள கவுண்டர்கள் பாஸ்டேக் வாகனம் செல்வதற்கும், 1, 2 மற்றும் 9, 10-வது கவுண்டர்கள் பாஸ்டேக் எடுக்காத வாகனங்கள் செல்வதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஸ்டேக் எடுக்காத வாகனங்கள் அதிகமாக உள்ளதால் அந்த வாகனங்கள் அதிக நேரம் நின்று செல்கின்றன. மேலும் வாகனங்கள் சென்று திரும்புவதற்கு ஒரே கட்டணம் வசூலிக்காமல் தனித்தனியாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் பணம் அதிகம் செலவாகிறது என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். அத்துடன் எந்த வகையான அடிப்படை வசதிகளும் சுங்கச்சாவடியில் இல்லை. அருகில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் மூடிக்கிடக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் கூறியதாவது:-
நாங்கள் குடும்பத்துடன் மதுரை சென்றுவிட்டு மீண்டும் உடனே ஊருக்கு திரும்ப உள்ளோம். சுங்கச்சாவடியை கடந்து சென்று மீண்டும் ஊருக்கு திரும்ப சேர்த்து ரிட்டன் டிக்கெட் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். திரும்பிச்செல்லும் வகையில் கொடுத்தால் 115 ரூபாய் மட்டும்தான், தற்போது சுங்கச்சாவடியை கடந்து சென்று திரும்ப தனித்தனியாக 75 ரூபாய் வசூல் செய்கிறார்கள். நான் ஏற்கனவே பாஸ்டேக் பெற்றுள்ளேன். அத்துடன் என்னுடைய கணக்கில் ரூபாய் 573 உள்ளது. இருந்தும் பாஸ்டேக் ஸ்கேனர் சரியாக வேலை செய்யாமல் என்னை கட்டணம் கட்ட கூறினார்கள். இவ்வாறு கூறினார்.
இது குறித்து சுங்கச்சாவடி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மொத்த வாகனங்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பாஸ்டேக் எடுத்துள்ளனர். எடுக்காத வாகனங்கள் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் வரிசையில் இருக்கும் நிலை உள்ளது. அரசு அறிவித்து உள்ள படிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ரிட்டன் டிக்கெட் வழங்க அரசு அனுமதி வழங்கவில்லை. அரசு பஸ்களுக்கும் விரைவில் பாஸ்டேக்
பெற மேலாளர்களிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story