இப்படியா முடிவெட்டுவது? தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை


இப்படியா முடிவெட்டுவது? தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2020 5:06 AM IST (Updated: 20 Jan 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

இப்படியா முடி வெட்டுவது? என தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி, 

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த கைகான் குப்பம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா. சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சமையல் பாத்திரம் சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று முன்தினம் மோகனா வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த மோகனா, தனது மகன் சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த சீனிவாசன், சலூன் கடைக்கு சென்று முடியை முழுமையாக வெட்டாமல் ஸ்டைலாக வெட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனா, “இப்படியா முடி வெட்டுவது? சரியாக வெட்டக்கூடாதா?, படிக்கிற வயதில் ஏன் இப்படி வெட்டினாய்?” என மகனை கண்டித்தார்.

பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார். தனது தாய் திட்டியதால் மனம் உடைந்த சீனிவாசன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story