வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கல சிலை - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சென்னையில் வெண்கல சிலை அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
விருதுநகர்,
விருதுநகரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கல சிலை அமைக்கப்படும். தஞ்சை பெரிய கோவிலுக்கு, தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தமிழில் கும்பாபிஷேகம் செய்திருந்தால் அதை முன்னுதாரனமாக கொண்டு தற்போதும் செய்யலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல மு.க.ஸ்டாலின் அதனை கேட்கிறார். சமய சம்பரதாயப்படி தான் கும்பாபிஷேகம் நடைபெறும்.
ஒரு பத்திரிகை விழாவில் பெரியாரை பற்றி ரஜினி பேசியதற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதைப்பற்றி கருத்து கூற இயலாது. ரஜினி தான் அதற்கு விளக்கமளிக்க வேண்டும். சமூகமும் அரசியலும் கெட்டுப்போய் உள்ளதாக கூறும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும். தமிழ் சமுதாயம் தான் உலக மக்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக விளங்கி வருகிறது.
குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரை முதல்- அமைச்சரும், வருவாய்த்துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே தெளிவான விளக்கமளித்து விட்டனர். தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தமிழக அரசு உறுதியாக பாதுகாப்பு அளிக்கும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தமட்டில் தி.மு.க.வினர் இவ்வளவு தூரம் வேண்டா வெறுப்பாக காங்கிரஸ் குறித்து பேசிய பின்பும் தன்மானம் இழந்து காங்கிரஸ் அந்த கூட்டணியில் நீடிக்க கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி நிரந்தரமானதல்ல. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அந்த அறிவிப்புக்கு பின்பு தமிழக அரசு அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
திராவிடம் குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளதை பார்த்தால் அவர் திராவிடர் இல்லையா அல்லது அவருக்கு அரசியல் தெரியவில்லையா என புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் அரைகுறையாக பேசுகிறார். அ.தி.மு.க. வை பொறுத்தமட்டில் ஜெயலலிதா தான் நிரந்தர பொது செயலாளர். தற்போதுள்ள தலைமை தொடரும். சசி கலாவை இணைப்பதை பற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story