ஊரை விட்டு ஒதுக்குவதாக கூறியதால் விரக்தி: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன், வியாபாரி தீக்குளிக்க முயற்சி


ஊரை விட்டு ஒதுக்குவதாக கூறியதால் விரக்தி: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன், வியாபாரி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Jan 2020 10:45 PM GMT (Updated: 20 Jan 2020 5:14 PM GMT)

ஊரை விட்டு ஒதுக்குவதாக கூறியதால் விரக்தி அடைந்த வியாபாரி, தனது மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான மக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களை, போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இதில் ஒரு தம்பதியும் மனு கொடுக்க வந்தனர்.

அப்போது திடீரென அவர்கள், மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தனர். பின்னர் பாட்டிலை திறந்து மண்எண்ணெயை தங்களுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதை பார்த்ததும் போலீசார் துரிதமாக செயல்பட்டு, தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர்.

இதையடுத்து அந்த 2 பேரின் உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள யாகப்பன்பட்டியை சேர்ந்த காய்கறி வியாபாரி கிறிஸ்துராஜா மற்றும் அவருடைய மனைவி அந்தோணிஜெனிமேரி ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் போலீசாரிடம், கிறிஸ்துராஜா கூறுகையில், நான் மற்றும் எனது உறவினர்கள் சேர்ந்து கட்டி கொடுத்த கிறிஸ்தவ ஆலயம் தொடர்பாக, எங்களிடம் வரி வாங்க மாட்டோம் என்று சிலர் தெரிவித்தனர். மேலும் எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்குவதாகவும் கூறுகின்றனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன், என்றார்.

இதைத் தொடர்ந்து அந்த தம்பதியை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story