தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது ரெயிலில் அடிபட்டு வேளாண் துறை அலுவலக கார் டிரைவர் சாவு


தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியபோது ரெயிலில் அடிபட்டு வேளாண் துறை அலுவலக கார் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 21 Jan 2020 4:15 AM IST (Updated: 20 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் பின்புறம், ரெயிலில் அடிபட்டு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கார் டிரைவர் பலியானார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் வழியாக காட்பாடி-விழுப்புரம் ரெயில்பாதை செல்கிறது. நேற்று இங்கு தண்டவாளத்தில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் கலசபாக்கம் அருகே உள்ள வில்வாரணி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் வெளி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனை விரும்பாததால் மன வேதனையில் இருந்த அவர் ரெயில்வே தண்டவளத்தில் வைத்து மது அருந்தியதாகவும், நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் வந்த ரெயிலில் அடிப்பட்டு அவர் உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் ரெயிலில் அடிப்பட்டு இறந்த இடத்தின் அருகில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story