ஆசிரியர்கள் வாழ்க்கை ஒளிவுமறைவற்றதாக இருக்க வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


ஆசிரியர்கள் வாழ்க்கை ஒளிவுமறைவற்றதாக இருக்க வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களின் வாழ்க்கை ஒளிவுமறைவற்றதாக இருக்க வேண்டும் என வேலூரில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

வேலூர், 

வேலூரில் உள்ள ஆசிரியர் இல்லத்தின் பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆசிரியர் இல்ல தலைவர் குணசீலபூபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வமுத்து வரவேற்றார். இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொன்விழா மலரை வெளியிட்டு நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆசிரியர் பணி என்பது புனிதமான பணி. நீங்கள் கருணையோடும், புரிதலோடும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதுதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். முக்கியமாக ஆசிரியர்களின் வாழ்க்கை ஒளிவு மறைவற்றதாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு முன்னுதாரணமாகதிகழ ஆசிரியர்கள் எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு எளிமை வாழ்க்கையை மேற்கொண்டால் கூடுதல் பணத்தேவை இருக்காது. அதனால் எளிய வாழ்க்கை முறையை மாணவர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களும் எளிமையை மேற்கொள்வார்கள்.

அப்துல்கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் எளிய வாழ்க்கையை மேற்கொண்டுதான் உயர்ந்தநிலைக்கு வந்தனர். நாம் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். பணத்தைவிட நேரம்தான் முக்கியம். எனவே நேரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

மனித மாண்பு பற்றியும் கற்றுத்தரவேண்டும். அதனால் மாணவர்கள் பக்குவப்பட்டவர்களாவார்கள். இந்திய பண்பாடு, கலாசாரம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்த பள்ளியில் வாரம் ஒருமணி நேரம் செலவிடவேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வன்முறையானது வன்முறைக்குதான் வித்திடும். அன்பு தான் சமுதாயத்தை சீர்படுத்தும். எனவே அனைவரும் மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

முன்னதாக வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில் பள்ளிக்கல்வியை பொறுத்தவரையில் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு கடைசி இடத்தில் இருக்கிறது. எண்ணிக்கையில் நாம் அதிகமாக இருந்தாலும் தரத்தில் பின்தங்கி இருக்கிறோம். அதை சரிசெய்ய வேண்டும். அது ஆசிரியர்களால் மட்டுமே முடியும். எந்த நாடு கல்விக்கு அதிகநிதி ஒதுக்குகிறதோ அந்த நாடுதான் வளர்ந்த நாடாக இருக்கிறது என்றார்.

விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம், வேலூர் சி.எஸ்.ஐ.பிஷப் சர்மா நித்யானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

Next Story