சிறுபாக்கம் அருகே பரபரப்பு நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி டிரைவர் குதித்து உயிர் தப்பினார்


சிறுபாக்கம் அருகே பரபரப்பு நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி டிரைவர் குதித்து உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 5:29 PM GMT)

நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து, சிமெண்டு தயார் செய்ய தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு, சேலம் அடுத்த வாழப்பாடியில் உள்ள மற்றொரு சிமெண்டு ஆலை நோக்கி லாரி ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இதை திருச்சி மாவட்டம் முசிறி சோர்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் சுப்பையா(வயது 49) என்பவர் ஓட்டி சென்றார்.

லாரி காலை 10.30 மணிக்கு சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென லாரியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ, லாரி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே டிரைவர் நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு, குதித்து உயிர் தப்பினார்.

எலும்புக்கூடானது

மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினர்.

இதனிடையே வேப்பூர், சின்னசேலம் பகுதி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே தீயை அவர்களால் அணைக்க முடிந்தது. இருப்பினும் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.

பரபரப்பு

லாரியில் இருந்த மூலப்பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் லாரி தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சேலம்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story