சீரான குடிநீர் வழங்கக்கோரி திருப்பூரில் பொதுமக்கள் தர்ணா


சீரான குடிநீர் வழங்கக்கோரி திருப்பூரில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 21 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 18-வது வார்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல பிரிவு அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 18-வது (புதிய வார்டு 5) வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சலை அடுத்த எஸ்.ஆர்.வி.நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டு குடிநீர் குழாயில் குறைந்த அளவே குடிநீர் வருவதாகவும் தெரிகிறது. குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எஸ்.ஆர்.வி.நகர் பெண்கள் உள்பட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் சந்திரன் தலைமையில் நேற்று காலை பூலுவப்பட்டி அருகே உள்ள 2-ம் மண்டல 5-வது பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சிகாமணி, மகாலிங்கம், பானுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் திடீரென அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வழங்கக்கோரி

இதையடுத்து அங்கு விரைந்து வந்த 2-ம் மண்டல சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதிக்கு 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும் குடிநீரை 5 நாட்களுக்கு ஒருமுறை தேவையான அளவு வழங்க வேண்டும். வீட்டு குழாய்களில் குடிநீர் சீராக வழங்க வேண்டும். எஸ்.ஆர்.வி.நகர் பகுதியில் பெரும்பாலான வீதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 4-வது திட்ட குடிநீர் குழாய் பதிக்கவில்லை. அனைத்து வீதிகளிலும் அந்த குழாய்களை பதிக்க வேண்டும்.

ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளை மூடுவதுடன், இந்த பகுதிக்கு தார்ச்சாலை, தெருவிளக்கு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட சுகாதார ஆய்வாளர் ராம கிருஷ்ணன் மாநகராட்சி ஊழியர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதன் பின்னரே போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story