பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பினர் - வண்டலூர்-பெருங்களத்தூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வந்தனர். இதனால் வண்டலூர்-பெருங்களத்தூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த வாரம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல லட்சக் கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் சென்னை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து அவர்கள், நேற்று முன்தினம் முதலே சென்னை திரும்பி வரத்தொடங்கினர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நேற்று முன்தினம் முதலே தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கி விட்டன.
இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம் சுங்கசாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் பல மணிநேரம் காத்துஇருந்தன. இதனால் சில இடங்களில் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வாகனங்கள் இலவசமாக செல்ல போலீசார் வழிவகை செய்தனர்.
வண்டலூர்-பெருங்களத்தூர் இடையே கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த கனரக வாகனங்கள் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. செங்கல்பட்டு சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றதால் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன.
அதன்பின்பு ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் நிற்காமல் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெரிய நெரிசல் ஏதும் ஏற்படாமல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வந்தனர்.
காலை 8 மணிக்கு பிறகு பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிகஅளவு வந்ததால் வண்டலூர்- பெருங்களத்தூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். மதியம் 12 மணிக்கு பிறகு போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது.
Related Tags :
Next Story