சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்- துண்டு பிரசுரம் வினியோகம்


சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்- துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 20 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 7:06 PM GMT)

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்-துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முதல் தொடங்கி வருகிற 27-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு வார விழாவின் முதல் நாளான நேற்று இருசக்கர வாகனங் களில் ஹெல்மெட் அணிந்து பெண்கள் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பொது வளாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இருசக்கர வாகன ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி, பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் திலகர் திடல், பால்பண்ணை ரவுண்டானா, அரசு மகளிர் கலை கல்லூரி, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பொது அலுவலக வளாகத்தில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவோருக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துண்டு பிரசுரம் வினியோகம்

அன்னவாசல் போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு வழி முறைகளான, மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். மேலும் உத்தரவு சின்னங்கள், எச்சரிக்கை சின்னங்கள் மற்றும் தகவல் சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் எச்சரிக்கையுடன் செல்வீர், சாலையில் கால்நடைகள் உலாவிட அனுமதிக்காதீர், சாலை குறியீடு பலகை மீது விளம்பரம் ஒட்டவோ, எழுதவோ கூடாது. சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து போக்குவரத்து இடையூறு செய்ய வேண்டாம். சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யுங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் அன்னவாசல் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டைப்பட்டினம்

கோட்டைப்பட்டினத்தில் 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

Next Story