கோவை அருகே, எஜமானரை காப்பாற்ற பாம்பை கடித்துக்கொன்ற வளர்ப்பு நாய்கள்


கோவை அருகே, எஜமானரை காப்பாற்ற பாம்பை கடித்துக்கொன்ற வளர்ப்பு நாய்கள்
x
தினத்தந்தி 20 Jan 2020 10:45 PM GMT (Updated: 20 Jan 2020 7:11 PM GMT)

எஜமானரை காப்பாற்றுவதற்காக பாம்பை, வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொன்றன.

போத்தனூர்,

கோவையை அடுத்த ஒத்தகால்மண்டபம் அருகே பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வீட்டின் அருகே உள்ளது. இவர், தனது நண்பருடன் தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த மாடுகளுக்கு தீவனம் வைக்க நடந்து சென்றார்.

அப்போது அவருக்கு சொந்தமான 3 வளர்ப்பு நாய்களும் உடன் சென்றன. அங்குள்ள வழியில் திடீரென்று 6 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது.

இதை பார்த்து ராமலிங்கம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த பாம்பிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். இதனால் ராமலிங்கத்துக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்பதை அறிந்த 3 வளர்ப்பு நாய்களும் பாம்பை நோக்கி சென்றன.

உடனே பாம்பு சீறியது. ஆனாலும் அந்த வளர்ப்பு நாய்கள் பின்வாங்காமல் பாம்பை கடிக்க முயன்றன. இதனால் பாம்பும், வளர்ப்பு நாய்களுக்கும் இடையே சண்டை நடந்தன.

ஆனாலும் அந்த 3 வளர்ப்பு நாய்களும் போராடி அந்த பாம்பை கடித்து குதறி கொன்றன. தன்னை காப்பாற்றுவதற்காக பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொன்றதை பார்த்து ராமலிங்கம் நெகிழ்ச்சி அடைந்தார். தனது எஜமானருக்கு ஏற்பட இருந்த ஆபத்தை தடுக்க பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொன்ற காட்சிகளை ராமலிங்கத்தின் நண்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

Next Story