கிரு‌‌ஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


கிரு‌‌ஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 7:34 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை, காவல் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பஸ் டிரைவர்கள், பயணிகள், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் பேசியதாவது:-

7 நாட்கள் நிகழ்ச்சிகள்

மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஊர்வலம் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துறை சார்பாக வருகிற 27-ந் தேதி வரை 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளாக மருத்துவ முகாம், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவது குறித்து விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மாவட்டத்தில் 1,260 விபத்துகள் ஏற்பட்டது. இதில் 341 விபத்துகளில் 354 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 1,601 நபர்கள் காயமடைந்தனர். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் விபத்து மற்றும் உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது.

விபத்தில்லா பயணம்

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒட்டுனர் உரிமம் பெற்றும், மது அருந்தாமலும், செல்போன் பேசாமலும், வாகனத்தை இயக்க வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திடவும், விபத்தில்லா கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் என்ற இலக்கினை எய்திடவும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊர்வலம்

முன்னதாக இந்த ஊர்வலம் பெங்களூரு சாலை வழியாக கிரு‌‌ஷ்ணகிரி 5 ரோடு வரை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமா மகே‌‌ஷ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், கிரு‌‌ஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ், போக்குவரத்து கோட்ட மேலாளர் அரவிந்தன், கிளை மேலாளர் கே.சி. இளங்கோவன் மற்றும் காவல்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், மற்றும், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story