புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூலிக்க கூடாது - கலெக்டர் அலுவலகத்தில் ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்தல்


புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூலிக்க கூடாது - கலெக்டர் அலுவலகத்தில் ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 7:44 PM GMT)

மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலம் பணி முடிவடையும் வரை புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ம.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தூத்துக்குடி தருவைகுளம் மீனவர் கூட்டமைப்பு சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், தருவைகுளத்தில் இருந்து வெள்ளப்பட்டிக்கு செல்லும் கடற்கரை சாலையில் கடற்கரை அருகில் உள்ள இடத்தில் எங்களின் மூதாதையர்கள் பனைதொழில் செய்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் எடுத்து கொண்டனர். இந்த நிலையில் அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து வருகிறார். எங்கள் பகுதியில் மீனவர்களுக்கு மீன்பிடி இறங்குதளம் விரிவாக்கம் செய்ய இடம் இல்லாத நிலையில் அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே மீனவ மக்களின் நலன்கருதி அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் அதிகாரம் செய்வதை தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

சாயர்புரத்தை சேர்ந்த மச்சேந்திரன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி ஒன்றியம் கட்டாலங்குளம் ஊராட்சியில் மாயக்கூத்தபுரம், கட்டாலங்குளம் ஆகிய ஊர்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டன. அவைகள் பழமைவாய்ந்ததாக இருப்பதால், இடிக்கப்பட்டு தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. எனவே பழைய அங்கன்வாடி மையங்கள் இருந்த இடத்தில் புதிதாக அங்கன்வாடி மையங்களை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

எட்டயபுரம் தாலுகா அயன்வடமலாபுரத்தை சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கொடுத்த மனுவில், எட்டயபுரம் தாலுகா வெம்பூர் வருவாய் கிராமத்தில் கடந்த 2018-19-ம் ஆண்டில் ராபி பருவத்தில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டன. அந்த பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீடு தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முத்துலாபுரம் குறுவட்டத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களுக்கும் ஒரே மாதிரி காப்பீடு தொகை வழங்காமல், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே பாரபட்சம் இன்றி அனைத்து ஊர்களுக்கும் ஒரே மாதிரியான காப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையில் மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலம் பணிகள் முடிவடையும் வரையிலும், ஒப்பந்த விதிகளின் படி பராமரிப்பு பணிகள், மின்விளக்கு அமைக்கும் பணிகள் முடியும் வரை புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விபத்துகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும். இதற்கு முதலில் மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

வீட்டுமனை பட்டா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை கிராமத்தை சேர்ந்த சுமார் 20 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘பொங்கல் பண்டிகைக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் சுற்றுவட்டார கிராம மக்கள் பரிசு பொருட்கள் வாங்கியதாக, செய்திகள் வெளியானது. இதனால் அந்த கிராம மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இது அந்த கிராமமக்களின் பெயரை கெடுக்கும் விதமாகவும், மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி சட்டம்- ஒழுங்கை கெடுக்கும் விதமாகவும் உள்ளது. ஆகவே இதற்கு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

Next Story