ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை - கனிமொழி எம்.பி. பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை - கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 7:44 PM GMT)

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை“ என்று கனிமொழி எம்.பி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு வலுவாக உள்ளது. எல்லா எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசு, மக்கள் கருத்தை பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை என்ற வகையில் ஒரு முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

தமிழகத்தில் விவசாயிகளை, விவசாயத்தை முற்றிலும் அழித்துவிடக்கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.

மேலும், அ.தி.மு.க ஆட்சி காலத்தில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்க கூடாது என்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்த ஆட்சியில் விவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

மத்திய ஆட்சியில் நாட்டையே தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து வருகின்றனர். ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால், ரெயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை நாம் சந்திக்க கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story