காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து கருத்து கூற டி.கே.சிவக்குமார் மறுப்பு
கர்நாடக காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து கருத்து கூற மறுத்த டி.கே.சிவக்குமார், தனிப்பட்டவரை விட கட்சியை புகழ்ந்து பேசுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவினர் நிறுத்திவிட்டனர்
சட்டசபை தேர்தலின்போது பிரசாரம் மேற்கொண்ட பா.ஜனதா தலைவர்கள், தங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் மகதாயி நதிநீர் பிரச்சினையை ஒரே நாளில் தீர்ப்பதாக உறுதியளித்தனர். ஆனால் பா.ஜனதா ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகியும், அந்த பிரச்சினைக்கு தீர்வு காண எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசவே அமித்ஷா கர்நாடகம் வந்தார்.
பா.ஜனதா தலைவர்களுக்கு மகதாயி, கிருஷ்ணா, காவிரி நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை இல்லை. அவர்களும், அந்த கட்சியினரின் தொகுதிகள் மட்டும் வளர வேண்டும் என்பதில் மட்டுமே பா.ஜனதாவினர் குறிக்கோளாக உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளின் வளர்ச்சியை பா.ஜனதாவினர் நிறுத்திவிட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுப்போம்.
உன்னிப்பாக கவனித்து...
கர்நாடக காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இது தொடர்பாக யார் என்னென்ன பேசுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நான் எந்த கோஷ்டியையும் சேர்ந்தவன் அல்ல.
நான் காங்கிரஸ் கோஷ்டி. தலைவர் நியமன விவகாரத்தில் கருத்து தெரிவித்து வருபவர்களிடம் போய் கேளுங்கள். இதில் நான் எதுவும் கூற மாட்டேன். கட்சியில் நான் தனிப்பட்டவரை புகழ்ந்து பேசுவதை விட கட்சியை புகழ்ந்து பேசுவதை விரும்புகிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.
Related Tags :
Next Story