மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு


மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி   3 வெடிகுண்டுகள் சிக்கின   நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 20 Jan 2020 11:15 PM GMT (Updated: 20 Jan 2020 8:49 PM GMT)

பயங்கரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி நடந்துள்ளது. விமான நிலையத்தில் நேற்று 3 வெடிகுண்டுகள் சிக்கின. ஆட்டோவில் வந்து வெடிகுண்டை விமான நிலையத்தில் வைத்துவிட்டு சென்ற மர்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

மங்களூரு விமான நிலையம்

கேரளா- கர்நாடகா எல்லையில் உள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதேபோல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான விமானங்கள் மங்களூருவுக்கு வந்து செல்கின்றன.

இதையொட்டி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கேட்பாரற்று கிடந்த பை

அவர்கள், பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வருபவர்கள் என அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே விமான நிலையத்திற்குள் அனுப்பி வருகிறார்கள். இவ்வாறாக நடத்தப்படும் சோதனையில் பயணிகள் சட்டவிரோதமாக கடத்தி வரும் தங்கம், வெள்ளி பொருட்கள், போதைப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மங்களூரு விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகில், மிகமிக முக்கிய நபர்களின் கார்கள் வந்து நிற்கும் இடத்தில் மடிக்கணினியை வைக்க பயன்படுத்தப்படும் ஒரு பை கிடந்தது. அந்த பை நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.

5 அடுக்கு பாதுகாப்பு

இதனால் விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பீதியில் அங்கும், இங்குமாக கலைந்து ஓட ஆரம்பித்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விமான நிலையத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் விமானங்கள் தரையிறங்குவதும் தாமதப்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் 5 அடுக்கு நிலையில் பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர்.

விமான நிலையத்தில் பரபரப்பு

இதற்கிடையே இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்திற்கு வந்து அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த பையில் 3 வெடிகுண்டுகள் இருந்தன.

அதைப்பார்த்து வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய அதிகாரிகள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பதற்றம் அடைந்த அவர்கள் உடனடியாக முக்கிய அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் மங்களூரு விமான நிலையமே மிகவும் பரபரப்பானது.

பிரத்யேக வாகனம்

அதுவரையில் வெடிகுண்டு பீதியில் இருந்த பயணிகள் உண்மையாகவே வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதால் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்தனர். பின்னர் உடனடியாக வெடிகுண்டுகளை வைக்க பயன்படும் பிரத்யேக வாகனத்தை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைத்தனர். பின்னர் அந்த வாகனத்தை மங்களூரு விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ஒரு பகுதியில் நிறுத்தி, அதற்குள் வெடிகுண்டை வைத்தனர்.

அதையடுத்து மங்களூரு விமான நிலையத்துக்கு மோப்ப நாய்களை கொண்டு வந்து அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். விமான நிலைய கழிவறைகள், ஊழியர்கள், அதிகாரிகளின் அறைகள், பார்சல்கள் வைக்கப்படும் கிடங்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

ஆவணங்கள் சரிபார்ப்பு

அதுமட்டுமல்லாமல் அதி நவீன கருவிகளைக் கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பயணிகள் அனைவரையும் மீண்டும் போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களுடைய உடைமை களையும் சோதனை செய்தனர். பாஸ்போர்ட்டு உள்ளிட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன.

இதற்கிடையே போலீசாரின் மற்றொரு குழுவினர் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு இருந்த பையை மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து விமான நிலையத்திற்குள் வைத்துவிட்டு சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரின் உருவத்தை கைப்பற்றி போலீசார் அவரை வலைவீசி தேடிவருகிறார்கள். நாசவேலைக்கு திட்டமிட்ட அவரை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு வெடிக்கவில்லை

இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

விமான நிலையத்தில் நாச வேலையில் ஈடுபடவே மர்ம நபர் வெடிகுண்டை இங்கு வைத்துள்ளார். நல்ல வேளையாக வெடிகுண்டு வெடிக்கவில்லை. ஒருவேளை வெடித்திருந்தால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இவ்வளவு போலீஸ் பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் எப்படி உள்ளே புகுந்தார் என்பது குழப்பமாக உள்ளது.

வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு இருப்பதால் மங்களூரு விமான நிலையத்தில் தரை யிறங்க இருந்த சில விமானங்கள் மைசூரு, பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. சில விமானங்கள் தரையிறங்க காலதாமதம் செய்யப்பட்டது. மேலும் மங்களூருவில் இருந்து புறப்பட இருந்த சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதுபற்றி முறையாக சம்பந்தப்பட்ட பயணி களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் பிடிப்போம்

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா கூறியதாவது:-

மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விமான நிலையத்தில் நாச வேலையில் ஈடுபட திட்டமிட்ட மர்ம நபரை விரைவில் பிடிப்போம்

இவ்வாறு அவர் கூறினார்.

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை

தமிழ்நாடு கன்னியாகுமரியில் வில்சன் என்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் தவுபிக், அப்துல் ஷமிம் ஆகிய 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் உள்பட நாட்டில் நாச வேலையில் ஈடுபடவும், முக்கிய தலைவர்களை கொல்லவும் திட்டமிட்ட 10 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க மங்களூருவில் கடந்த மாதம்(டிசம்பர்) 19-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரசாரும், முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

650 பேர் நேரில் ஆஜராக...

அப்போது நடந்த கலவரத்தில் 2 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். அது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக 650 பேர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு பந்தர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே மங்களூரு விமான நிலையத்தில் தற்போது வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க வெடிகுண்டை வெடிக்க செய்து நாசவேலையில் ஈடுபட முயற்சித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடு முழுவதும் போலீசார் உஷார்

இதற்கிடையே மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களிலும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

தலைநகர் புதுடெல்லியிலும் சோதனை நடத்தப்பட்டது. வருகிற 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததுடன், தற்போது மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story