மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் மீட்பு - கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கை
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த வாலிபர் கலெக்டர் ஜெயகாந்தன் நடவடிக்கையால் மீட்கப்பட்டார்.
சிவகங்கை,
தேவகோட்டை வட்டம், பெரியஉஞ்சனை கிரா மத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் விஸ்வநாதன் (வயது 35). இவர் கடந்த 2016-ம்ஆண்டு மலேசியா வில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அவரை அழைத்து சென்ற ஏஜெண்டு அவருக்கு ஏற்கனவே கூறியபடி வேலை தராமல், பல வேலைகளை கொடுத்து கொத்தடிமையாக நடத்தினாராம்.
இதுபற்றி ஏஜெண்டிடம் கூறி, தன்னை இந்தியாவிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விஸ்வநாதன் கூறியதை தொடர்ந்து, அவரை அழைத்து வர ரூ.20 லட்சம் தர வேண்டும் என்று ஏஜெண்டு கேட்டாராம். மேலும் விஸ்வநாதனின் தாயார் சிவபாக்கியத்திடம் இதுபற்றி கூறி ரூ.12 லட்சம் வரை பெற்றுகொண்டாராம்.
ஆனால் தொடர்ந்து விஸ்வநாதனை இந்தியாவிற்கு அழைத்துவர ஏஜெண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து தாயார் சிவபாக்கியம் கலெக்டர் ஜெயகாந்தனிடம், மலேசியாவில் கொத்தடிமையாய் இருக்கும் தன்னுடைய மகனை மீட்டு தரும்படி மனு கொடுத்தார்.
இதையடுத்து கலெக்டர் ஜெயகாந்தன் அரசுக்கும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து விஸ்வநாதனை இந்தியாவிற்கு திரும்ப அழைத்துவர நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விஸ்வநாதனை மீட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியா வந்த அவர், தனது தாயாருடன் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து கலெக்டரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவரிடம் கலெக்டர் நடந்த விவரங்களை கேட்டார். அதை கூறியதை தொடர்ந்து, விஸ்வநாதன் தனக்கு வாகனம் ஓட்டும் உரிமம் உள்ளது, முன்அனுபவமும் உள்ளது என்றும் தனக்கு தொழில் தொடங்க உதவும்படி கேட்டு கொண்டார்.
இதையடுத்து விஸ்வநாதனுக்கு வாகனம் வாங்க வங்கி கடனுதவி பெற்று தரப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் கலெக்டர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலமோ அல்லது அரசின் மேன் பவர் கார்ப்பரேசன் மூலம் சென்றால் மட்டுமே பணி பாதுகாப்பு இருக்கும். அவ்வாறு இல்லாமல் சென்றால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே அவ்வாறு அங்கீகாரம் இல்லாத ஏஜெண்டுகள் மூலம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இது போன்ற புகார் மனுக்கள் அதிகம் வருகின்றன. அரசும் அவர்களுக்கு உதவி செய்து மீட்டு வந்து குடும்பத்துடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு தொழில் தொடங்க உரிய பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல நினைப்பவர்கள் நமது மாவட்டத்திலேயே தொழில் தொடங்க வேண்டும்.
விஸ்வநாதன் தாயார் ஏஜெண்டு குறித்து புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விஸ்வநாதன் கூறும்போது, நான் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பி மலேசியாவிற்கு 2016-ம் ஆண்டில் தனியார் நிறுவன விசா பெற்று பணிக்கு சென்றேன். ஏஜெண்டு என்னை ஏமாற்றி, அனுமதி வழங்கிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லாமல், வேறு நிறுவனத்திற்கு கொத்தடிமையாக செல்லும் பணி வழங்கினார். நான் மன்றாடியதை தொடர்ந்து, எனது தாயிடம் நான் ஒழுங்காக பணி செய்யாமல் தவறு செய்ததால், என்னை பிடித்து வைத்திருப்பதாக கூறி ரூ.12 லட்சம் வரை வாங்கி கொண்டார். என்னை மீட்டு வருவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story