சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் பங்கேற்பு
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறையின் சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதனையொட்டி நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 27-ந்தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட உள்ளது. 18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகம், அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையுடன் வாகனம் இயக்குதல் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதேபோல இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிதல், 4 சக்கர வாகனங்கள் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிதல் போன்ற பழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் வீரராகவராவ் வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். இதில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் புதிய பஸ் நிலையம், ரோமன் சர்ச், அரண்மனை சாலை, கேணிக்கரை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
ஊர்வலத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்மாறன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, மாணிக்கம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story