வாக்களிக்கவில்லை என்பதற்காக குடிநீர் வினியோகம் துண்டிப்பு - கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்


வாக்களிக்கவில்லை என்பதற்காக குடிநீர் வினியோகம் துண்டிப்பு - கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 21 Jan 2020 4:00 AM IST (Updated: 21 Jan 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக குடிநீர் வினியோக இணைப்பை துண்டித்து விட்டதாக கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியின்போது வஞ்சக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் கலெக்டர் கண்ணனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து விருதுநகர் யூனியனில் உள்ளது. நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் ஜெயபாண்டியம்மாள் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கிராமத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளோம்.இதுபற்றி பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டபோது அவரது கணவர் யாருக்கு வாக்களித்தீர்களோ அவரிடம் சென்று கேளுங்கள் என்று கூறிவிட்டார்.

எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு வழங்கம்போல் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாடசாமி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி போதைப்பொருள் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார்.

தலித்விடுதலை இயக்க மாநில செயலாளர் பீமாராவ் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர்அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டி கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 4½ ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத்துறையினரால் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் 2½ ஏக்கர் நிலத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கப்படாததால் அதை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி 2 ஏக்கர் நிலத்திற்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயலாளர் காளிதாஸ் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நேர்மையாக நடத்தவேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின்பு நடக்கும் முதல் கிராமசபை கூட்டம் என்பதால் தேர்தல் விரோதம் காரணமாக சில பஞ்சாயத்துகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே கிராம சபை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும். கூட்டம் நடைபெறும் இடங்கள், நேரம் குறித்து கிராம மக்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டும். புதிய தலைவர்கள் பொறுப்பேற்று உள்ளதால் இதற்குமுன்பு உள்ள வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கூட்டம் முழுவதும் வீடியோ ஒளிப்பதிவு செய்யவேண்டும். கோரம் இல்லாத கூட்டங்களை ரத்து செய்து வேறு ஒரு நாளில் நடத்தவேண்டும். கூட்டத்தில் முறைகேடு நடந்தால் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களை நேர்மையாக நடத்த தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story