விருதுநகர் அருகே, குடிநீரால் சிறுநீரக பாதிப்புக்கு பலர் உயிரிழப்பு - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகர் அருகே பாவாலி பஞ்சாயத்தில் உள்ள கிராமங்களில் குடிநீரால் கிராம மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளிலும் நிலத்தடி நீர் ஆதாரத்தை கொண்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தாமிர பரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தொடங்கினாலும் இன்னும் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது.
விருதுநகர் அருகே உள்ள பாவாலி பஞ்சாயத்தில் சீனியாபுரம், சொக்கலிங்காபுரம், சந்திரகிரிபுரம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரத்தை கொண்டே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீரால் இந்த கிராமத்தில் உள்ள பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. தற்போது 20-க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி சந்திரகிரிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:- பாவாலி பஞ்சாயத்தில் உள்ள இந்த 3 கிராமங்களிலும் குடி நீரால் கிராம மக்களுக்கு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து பலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு வந்தபோதும் இதுபற்றி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கனவே அருப்புக்கோட்டை பகுதியில் தும்மு சின்னம்பட்டி கிராமத்தில் இதே நிலைதான் நீடித்தது. இந்த கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரை ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் வடிகால்வாரியம் மற்றும் சுகாதார துறை மூலம் கிராமங்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீரை ஆய்வு செய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானால் உடனடியாக தரமான குடிநீரை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகமாவதற்குள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story