மயானத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை: குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


மயானத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை: குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 21 Jan 2020 3:55 AM IST (Updated: 21 Jan 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

கஸ்பாபேட்டையில் மயானத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மொடக்குறிச்சி தாலுகா கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட வெள்ளிமலைப்பாறை, பூலப்பாளையம், செங்கரபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த நாங்கள் பூலப்பாளையம் காலனிக்கு அருகே உள்ள இடத்தை மயானமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்து கற்களை நட்டு வைத்துள்ளோம். மேலும், மயானத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறோம். இந்தநிலையில் சிலர் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மயானத்தில் உள்ள வேலியை அகற்றி, மரங்களை வெட்டியுள்ளனர். எனவே மயானத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மயானமாக மீண்டும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 169 மனுக்களை கொடுத்தனர். இதில் கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story