குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 12:05 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி புதுவையில் முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையிலும் இந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் ஹாஜி முகமது யாசீன் தலைமை தாங்கினார்.

பிரம்மாண்ட தேசியக்கொடி

சுதேசி மில் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் பிரம்மாண்டமான தேசியக்கொடி ஒன்றையும் எடுத்துச் சென்றனர். ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு, வீதி, மிஷன் வீதி வழியாக புதுவை தலைமை தபால் நிலையத்தை அடைந்தது.

அங்கு ஜமாஅத்துல் உலமா சபையின் புதுவை மாநில செயலாளர் மவுலவி அப்துல் மாகிக் மிஸ்பாஹி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு செயலாளர் சிபி சந்தர், மீனவர் விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவன தலைவர் மங்கையர்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஊர்வலத்தில் அனைத்து ஜமாஅத்தினர், முஸ்லிம் சமூகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். போராட்ட முடிவில் சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Next Story