மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டை பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்


மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டை பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 6:54 PM GMT)

பட்டதாரி மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்ட வாலிபரை மீட்டு தரக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

பண்ருட்டி அருகே உள்ள மேல்இருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 26). இவருடைய மனைவி சுகன்யா(25). பட்டதாரியான இவர், தற்போது கொள்ளுகாரன் குட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார்.

இந்த நிலையில் சுகன்யா நேற்று அவரது 3 வயது பெண் குழந்தையுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

பெண்களுடன் தொடர்பு

எனக்கும், ராஜேசகருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் தர்ணிகா என்ற குழந்தை உள்ளது. எனது கணவருக்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதை கண்டித்த என்னை, எனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, நாத்தனார் ஆகியோர் அடித்து துன்புறுத்தினார்கள்.

இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகாவது அவர் மனம் திருந்தி வாழ்வார் என்ற நம்பிக்கையில் பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மீண்டும் எனது கணவர், சில பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை துன்புறுத்தி வந்தார்.

2-வது திருமணம்

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காணவில்லை என்றும், எனது கணவர் கடத்தி சென்று விட்டதாகவும் அறந்தாங்கி போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் அவர்கள் டிக்-டாக் வீடியோ ஒன்றையும் அனுப்பி இருந்தார்கள். அதில் எனது கணவருக்கு அருகில் நின்ற பெண் ஒருவர், கண்ணைமூடி கண்ட கனவே... பலஜென்மம் தாண்டி வந்த உறவே... என்ற சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சி இருந்தது. மேலும் இது போன்ற சில வீடியோ காட்சிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

விசாரணையில் அந்த பெண் கவிநயா என்பதும், டிக்-டாக் செயலியின் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், அவரை எனது கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

போலீசில் புகார்

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் மனுவை வாங்காததால் இணையதளம் மூலம் புகார் செய்தேன். தொடர்ந்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். கடந்த 10-ந் தேதி முதல் தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக போலீசார், என்னிடமே விசாரணை நடத்தி வருகிறார்கள். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் வருகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது கணவரை கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும். எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story