கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் புறப்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்


கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் புறப்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 7:40 PM GMT)

உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்ட விவசாயிக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம்,

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதுவரை இப்பணியால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் சாலையோரம் கேபிள் வழியாகவும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் நிலத்தடியில் கேபிள் வழியாகவும் இது போன்ற திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். விவசாய விளை நிலத்தின் வழியாக மின் கோபுர பாதை அமைக்கக் கூடாது. அதற்கு பதிலாக சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை விவசாயிகள்வலியுறுத்தி வருகின்றனர்.

இழப்பீடு தொகை

இந்நிலையில் உயர்மின் கோபுர திட்டம் புகளூரிலிருந்து அரசூர் வரை செல்லும் மின்பாதை திட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் கிராமம் வழியாக செயல்படுத்தப்படவுள்ளது. விவசாய நிலங்களில் இந்த மின் தொடர்பாதை செல்கிறது. இந்நிலையில் தங்களது விளை நிலத்திற்கு இழப்பீட்டு தொகை அதிகப்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்திருந்தனர்.

இது சம்பந்தமாக பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் உயர்மின்கோபுரம்அமைக்கப்பட உள்ள நிலத்திற்கு முன்கூட்டியே இழப்பீட்டு தொகை அறிவிக்க வேண்டும். மேலும் வெளிமார்க்கெட் அடிப்படையில் அதிகமாக இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். அதன் பின்னர் தான் விளை நிலத்தில் உயர்மின் கோபுரபாதை அமைக்கும் பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தநிலையில் பவர்கிரிட் நிறுவனத்தினர், மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று உயர் மின் கோபுரங்கள் அமைய உள்ள இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் விவசாயிகள் விரைந்து சென்று குழிதோண்டும் பணியை தடுத்து நிறுத்தி விளை நிலத்திற்கு இழப்பீட்டு தொகை எவ்வளவு தருவீர்கள், என்பதை அறிவிக்காமல் எப்படி நீங்கள் எங்கள் விளை நிலத்திற்குள் குழி தோண்டலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அவர்களிடம் பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், பவர்கிரிட் அதிகாரி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடக்கும் போதே விவசாயி விஸ்வநாதன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பாட்டிலில் கொண்டுவந்திருந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களிடமிருந்து பாட்டில்களை பிடுங்கி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்சினை குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்டசெயலாளர் குமார், பல்லடம் வட்டார தலைவர் வை.பழனிசாமி ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் செம்மிபாளையம் கிராமத்திற்கு வந்து விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு முருகவேல் ஆகியோர் அங்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்பொழுது நடக்கும் பணியை தடுத்தால் கைது செய்ய நேரிடும் என்று கூறினார்கள்.

பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கும்போதே பவர் கிரிட் நிறுவனத்தினர் பொக்லைன் மூலம் குழிதோண்டும் பணியை தொடர்ந்தனர். இதனால் கடும் கோபமடைந்த விவசாயிகள், மின்கோபுரம் அமைக்க குழிதோண்ட எதிர்ப்பு தெரிவித்து நடைபயணமாக கலெக்டரை பார்த்து நியாயம் கேட்கிறோம் என்று கூறிவிட்டு ஒரு பசுமாடு, பாய், மண்வெட்டி போன்றவைகளுடனும் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக புறப்பட்டனர். மோகனப்பிரியா என்ற பெண் தனது கைக்குழந்தையுடனும் கலெக்டர் அலுவலத்திற்கு சென்றார். இந்த நடை பயணத்தில் விவசாயிகள் சங்கநிர்வாகிகள் கோஷம் எழுப்பியபடி நடைபயணமாக கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.

Next Story