சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பூ கொடுத்து அமைச்சர் அறிவுரை


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பூ கொடுத்து அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 8:38 PM GMT)

திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பூ கொடுத்து அறிவுரை கூறினார்.

திண்டுக்கல்,

சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் போலீஸ் டிரைவர்கள், பயிற்சி டிரைவர்கள், அரசின் பல்வேறு துறை டிரைவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்தி சென்றனர்.

இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பூ கொடுத்து அறிவுரைகள் வழங்கினார். ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விபத்துகள் குறைவு

இதைத் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள். அதேபோல் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்கும்படி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. மேலும் விபத்தை தடுக்கும் வகையில் வேகத் தடுப்புகளும் அமைக்கப்படுகின்றன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகள் 19 சதவீதம் குறைந்துள்ளது.

திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை, முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, பிரதமர் நரேந்திரமோடி தினமும் விளக்கம் அளித்து வருகிறார். குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் அசாமில் மட்டுமே நடக்கிறது. தமிழகத்தில் அமைதி நிலவுகிறது. இதனால் அது பழைய கதையாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story