ஷீரடி சாய்பாபா பிறப்பிட சர்ச்சைக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காரணம் அல்ல சிவசேனா சொல்கிறது
ஷீரடி சாய்பாபா பிறப்பிட சர்ச்சைக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காரணம் அல்ல என்றும், அவரை குற்றம்சாட்டக்கூடாது என்றும் சிவசேனா கூறி உள்ளது.
மும்பை,
அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி, சாய்பாபா மறைந்த இடமாகும். அங்குள்ள கோவிலில் சாய்பாபா பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். வெளிநாட்டு பயணிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் சாய்பாபாவின் பிறப்பிடமான பர்பானி மாவட்டத்தில் உள்ள பாத்ரியை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாக கடந்த 9-ந் தேதி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இதையடுத்து பாத்ரி கிராமம் சாய்பாபாவின் பிறப்பிடம் என்பதற்கு ஷீரடி கோவில் நிர்வாகிகள், உள்ளூர் மக்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாத்ரியை மேம்படுத்தினால், ஷீரடியின் மகத்துவம் குறைந்து விடும் என்று அவர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷீரடியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
முற்றுப்புள்ளி
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகிகள், அந்த பகுதியை சேர்ந்த பிரமுகர்களை மும்பைக்கு அழைத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது பாத்ரி தான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று கூறியதை உத்தவ் தாக்கரே திரும்ப பெற்று விட்டதாக சிவசேனா எம்.பி. சதாசிவ் லோகண்டே நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ வின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
யாரும் பறித்து விட முடியாது
ஷீரடி சாய்பாபா கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரத்து 600 கோடி. இது தவிர தினமும் கோவிலுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை கிடைக்கிறது. சமூக நல பணிகளும் நடைபெற்று வருகிறது. சாய்பாபாவினால் ஷீரடி வளமிக்கதாக மாறியது. வளமிக்க ஷீரடியை யாரும் பறித்து கொள்ள முடியாது.
பாத்ரி தான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது சொந்த கருத்தாக தெரிவிக்கவில்லை. சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தின் அடிப்படையில் அவர் கூறினார்.
சாய்பாபா எங்கு பிறந்தார் என்று யாராலும் சொல்ல முடியாது. ஷீரடியில் சாய்பாபா முதலில் தோன்றியபோது, அவரது பெயர் என்ன? அவர் எங்கு இருந்து வந்தார்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பாத்ரி அவரது பிறப்பிடமாக இருக்கலாம் என்று அரசிதழில் உள்ளது. இதை அரசிதழில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எழுதவில்லை. அந்த அரசிதழை அவர் வெளியிடவும் இல்லை.
குற்றம்சாட்டக்கூடாது
எனவே சாய்பாபா பிறப்பிட சர்ச்சையை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கிளப்பவில்லை. சர்ச்சைக்கு அவர் தான் காரணம் என்று குற்றம்சாட்டக்கூடாது.
பாத்ரி மற்றும் ஷீரடி மக்களும் சர்ச்சையை உருவாக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது புனிதர்களின் நன்மதிப்பை குறைத்து விடும். இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பிரச்சினை கிளப்பப்பட்டு இருக்கிறது. ஷீரடியின் மகத்துவம் ஒருபோதும் குறைந்து விடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சாய்பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்பதை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திரும்ப பெற்றுக்கொண்டதால், அந்த கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேச உள்ளனர்.
Related Tags :
Next Story