மேல்மாயில் கிராமத்தில் காளைவிடும் விழாவில் மாடு முட்டியதில் கட்டிட மேஸ்திரி பலி
மேல்மாயில் கிராமத்தில் நடந்த காளைவிடும் போட்டியில் மாடு முட்டி கட்டிட மேஸ்திரி இறந்தார். விழாவின்போது கூட்டத்தினர் முண்டியடித்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
குடியாத்தம்,
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலார் பண்டிகையையொட்டி 128-வது ஆண்டாக காளைவிடும் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.வி.குப்பம், குடியாத்தம், பரதராமி, ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. விழாவை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக காளைகள் ஓடும் இருபுறமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை நடத்தி அனுமதித்தனர். பின்னர் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.
இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் ஆரவாரப்படுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதல் இறுதிவரை போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தன. சிலர் காளைஓடும் பாதைக்குள் புகுந்து காளைகளை தொட முயன்றனர். அப்போது காளைகள் சிலரை தூக்கி வீசின. போட்டிகளின் போது கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
தொடர்ந்து வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதிலும், கீழே விழுந்ததிலும் 30 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பள்ளிகொண்டா அருகே உள்ள வேப்பங்கால் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் சிவசக்தி உள்பட 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசக்தி இறந்து விட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார்.
போட்டிகளில் பங்கேற்ற 2 காளைகள் தவறி விழுந்ததில் அவற்றின் கால்கள் உடைந்தன. உடனடியாக அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காளைவிடும் திருவிழாவில் விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கே.வி.குப்பம் தாசில்தார் சுஜாதா உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணித்தனர். இதையொட்டி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story