மத்திய-மாநில அரசு விருதுகளை பெற வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அரசு கொறடா பேச்சு


மத்திய-மாநில அரசு விருதுகளை பெற வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அரசு கொறடா பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 3:24 PM GMT)

மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மத்திய, மாநில அரசு விருதுகளை பெற வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 201 கிராம ஊராட்சிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பயிற்சியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். எம்.எல்.ஏ.க்கள் ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), ஆர்.டி.ராமச்சந்திரன்(குன்னம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசியதாவது:-

கிராம ஊராட்சி தலைவர்களை, அந்தந்த ஊராட்சி மக்கள் நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்துள்ளார்கள். உங்கள் ஊராட்சியில் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி போன்ற அனைத்து வகையான வசதிகளையும் பொதுமக்களுக்கு செய்து கொடுத்து, சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை நீங்கள் பெற்று அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறையின் பயிற்சி பெற்ற வல்லுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, கிராம அளவில் நிறைவேற்றப்படும் மத்திய-மாநில அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திடவும், கிராம ஊராட்சியின் கூட்டத்தினை மாதம் ஒருமுறை கூட்டி, வளர்ச்சித் திட்டங்களை தயார் செய்து, கிராம சபையின் ஒப்புதல் பெற்று, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுத்தி, கிராம முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இந்த பயிற்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் அசோகன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story