பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் ஊராட்சி தலைவர்கள் கேட்க வேண்டும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு


பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் ஊராட்சி தலைவர்கள் கேட்க வேண்டும் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 4:23 PM GMT)

பொதுமக்களின் கோரிக்கைகளை ஊராட்சி தலைவர்கள் கனிவுடன் கேட்க வேண்டும் என பயிற்சி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம் வேங்கிக்காலில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. முதல் நாளான நேற்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி நடந்தது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., உதவி இயக்குனர் அரவிந்தன் (ஊராட்சிகள்), முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பயிற்றுனர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

நான் 2006-ம் ஆண்டு சேவூர் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் கோரிக்கையுடன் உங்களை தேடி வருவார்கள். நீங்கள் இரவு, பகல் என பாராமல் முகம் சுளிக்காமல், பணிவுடனும், கனிவுடனும் அவர்களது கோரிக்கையினை கேட்க வேண்டும்.

ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தினமும் காலையில் ஒரு மணி நேரம் நேரில் சென்று பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால் பொதுமக்களும், ஊராட்சி பணியாளர்களும் உங்களை பார்த்து உங்களுடன் சேர்ந்து கிராமத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுவார்கள். இப்படி செய்தால் முதல் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 820 ஊராட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யுப்பட்டுள்ள அனைவரும் எந்த நேரத்திலும் அமைச்சர் என்ற முறையில் என்னை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள நான் உதவி செய்யவேன்.

எந்த ஒரு பணிக்கும் ரசீது பெற்று பணம் கொடுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி ஆணையாளரிடம் ஒப்புதல் பெற்று பணிகளை முடிக்க பாடுபட வேண்டும். நான் எனது பணியை சிறப்பாக செய்ததால் தற்போது அமைச்சராகி உள்ளேன். நீங்கள் தற்போது இருக்கும் இடத்திலிருந்து தான் நான் அமைச்சராகி உள்ளேன். மக்களின் நம்பிக்கையை பெற்றால் இந்த வாய்ப்பு நாளை உங்களுக்கும் கிடைக்கும். ஊராட்சிகளில் பல கணக்குகள் உள்ளன. குறிப்பாக மின்சார கட்டணம் போக மீதித் தொகையினை அரசு வழிகாட்டுதல்களின் பணிகள் எடுத்தால் மாவட்ட நிர்வாகம் அதற்கான ஒப்புதல் வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். வருகிற 24-ந் தேதி வரை தினமும் 3 ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி நடக்கிறது.

Next Story