சுற்றுச்சூழலுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கவர்னர் ஆதரிக்கிறாரா? - காங். மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கேள்வி


சுற்றுச்சூழலுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கவர்னர் ஆதரிக்கிறாரா? - காங். மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கேள்வி
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 22 Jan 2020 11:59 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கவர்னர் கிரண்பெடி ஆதரிக்கிறாரா? என காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பினார். புதுவைக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளரான சஞ்சய்தத் நேற்று வந்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதித்து இருப்பது மக்கள் மீது பா.ஜ.க. நடத்திய மற்றொரு தாக்குதலாகும். தொடர்ந்து தென்மாநில மக்களை பா.ஜ.க. வஞ்சித்து வருகிறது. அதிலும் தமிழகம், புதுச்சேரி மக்களை குறிவைப்பது ஏன்?.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல்துறையின் அனுமதிகூட தேவையில்லை என்று முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இது பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதனால் விவசாயிகள், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பாதிப்புக்குள்ளான போது மத்திய அரசு திரும்பிக்கூட பார்க்கவில்லை.

புதுவையில் காங்கிரஸ் அரசு இருப்பதால் புதுவை மக்களை குறிவைத்து மத்திய அரசு தாக்குகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து புதுவை அரசு போராடும். மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அக்கறையாக இருப்பேன் என்று கூறும் கவர்னர் கிரண்பெடி ஏன் இந்த விஷயத்தில் அமைதியாக உள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அவர் ஆதரிக்கிறாரா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளது. புதுவை கட்சிக்குள்ளும், மேலிடத்திலும் அவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். ஆனால் அதை மீறி செயல்பட்டதால் தனவேலு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் மீதான அவரது விமர்சனம் குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை. நான் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனது நடவடிக்கைகள் குறித்து புதுவை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.

பேட்டியின்போது புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் உடனிருந்தார்.

Next Story