படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


படப்பை அருகே, வடமாநில பெண் மர்ம சாவு - கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Jan 2020 4:45 AM IST (Updated: 23 Jan 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே ஒடிசா மாநில இளம்பெண் வீட்டில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

படப்பை, 

ஒடிசா மாநிலம் துரெக்ட் கிராமம் பதகரி பகுதியை சேர்ந்தவர் கரினா பிரியதர்ஷினிககன் (வயது 20). அதே ஒடிசா மாநிலம் மீராம் நகர், பெர்ஷாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா குமாரிஷாகு (வயது 22). இவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி பெரியார் நகர் பகுதியில் வாடகை வீட்டில் ஒரு ஆண்டாக தங்கி ஒரகடம் பகுதியில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ரஞ்சிதா குமாரிஷாகு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

கரினா பிரியதர்ஷினிககன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மாலை ரஞ்சிதா குமாரிஷாகு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கரினா பிரியதர்ஷினிககனின் கழுத்து மற்றும் கன்னத்தில் நக கீறல்கள் காணப்பட்டது. மேலும் அவர் இறந்துபோனது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா குமாரிஷாகு இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கரினா பிரியதர்ஷினிககனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கரினா பிரியதர்ஷினிககனை ஒடிசாவை சேர்ந்த மானஸ் என்பவர் காதலித்து வந்ததாகவும், அவர் தற்போது சோழிங்கநல்லூரை அடுத்த சிறுசேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை சம்பவத்திற்கு பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆகவே அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரினா பிரியதர்ஷினிககன் கொலை செய்யப்பட்டாரா? அவர் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story