பாகிஸ்தான் தலைவர் போல் பேசுகிறார் குமாரசாமி, மனஅழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார் பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் பரபரப்பு
குமாரசாமி பாகிஸ்தான் தலைவரை போல் பேசுவதாகவும், அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
மங்களூரு விமான நிலையத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு பையை போலீசார் பாதுகாப்பாக எடுத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் போட்டு வெடிக்க செய்தனர். இந்த பணியை மங்களூரு போலீசார் 8 மணி நேரம் மேற்கொண்டனர். இதை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடுமையாக குறை கூறினார். இது வெடிகுண்டு செயல்விளக்க நிகழ்ச்சியை போல் இருந்ததாக கேலி செய்தார். இதுகுறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குமாரசாமி முதல்-மந்திரி ஆனதே செயல்விளக்கம் செய்தது போல் தான் இருந்தது. அவரது அரசியலே செயல்விளக்கத்தை போல தான் உள்ளது. முன்னாள் முதல்-மந்திரியாக பணியாற்றியபோதும், ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீது ஒரு அன்பு இல்லை. அவருக்கு இந்து மத எண்ணம் இல்லை.
பிறப்பு சான்றிதழ்
குமாரசாமி கர்நாடகத்தின் ஓவைசியாக மாறி வருகிறார். அவர் பாகிஸ்தான் தலைவர் போல் பேசுகிறார். மாநில அரசு குமாரசாமியை ஒரு நல்ல மனநல மருத்துவமனைக்கு அனுப்பி, சோதனை செய்தால் நன்றாக இருக்கும். சமீபகாலமாக அவரது பேச்சை பார்க்கும்போது, அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பது போல் தெரிகிறது.
மங்களூரு வெடிகுண்டு வழக்கில் ஆதித்யாராவ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர். போலீசார் நேர்மையான முறையில் வெளிப்படையாக பணியாற்றுகிறார்கள். குமாரசாமி பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.எம்.இப்ராகிம், பிரதமர் மோடியின் தந்தையின் பிறப்பு சான்றிதழ் மோடியிடம் இல்லை. இத்தகையவர்கள் மக்களிடம் ஆவணங்களை கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அவருக்கு தெரியவில்லை
சி.எம்.இப்ராகிமின் கொள்ளுப்பாட்டன் எந்த சாதியை சேர்ந்தவர்?. அவர் உண்மையான முஸ்லிம் இல்லை. திப்பு சுல்தான் காலத்தில் மதம் மாறிய கோழை. அவரை பற்றியே அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மோடியை பற்றி பேச தகுதி இல்லை.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.
குமாரசாமி பற்றிய பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story