தஞ்சையில் 2-வது நாளாக பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி 600 பேர் பங்கேற்பு


தஞ்சையில் 2-வது நாளாக பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி 600 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jan 2020 11:00 PM GMT (Updated: 22 Jan 2020 8:02 PM GMT)

தஞ்சை மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தஞ்சையில் 2-வது நாளாக நேற்று நடந்தது. இதில் 600 பேர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைப்படி மத்திய மனித வள மேம்பாட்டு துறையால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 9, 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 2-வது நாளான நேற்று 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டியான கையுந்துபந்து, கபடி, கால்பந்து, கோ-கோ, இறகுப்பந்து, கேரம், சதுரங்கம் ஆகிய போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

600 பேர் பங்கேற்பு

இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 600 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட தகவல் சாதன அலுவலர் மார்ட்டின் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேம்பாலம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.


Next Story