உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களை பந்தாடிய காளைகள்
திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். அப்போது அவர்களை காளைகள் பந்தாடின.
தாடிக்கொம்பு,
திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேர் திருவிழா நடைபெறும். இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந்தேதி தேர் பவனி நடைபெற்றது.
இந்தநிலையில் தேர் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திண்டுக்கல், திருச்சி, மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, விராலிமலை, மணப்பாறை, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்டன. மேலும் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
முதலில் ஊர் அழைப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது சுற்றுகள் அடிப்படையில் மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றன. அதிலும் சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளி, பந்தாடி சென்றன. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர்.
இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் செல்போன், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா பாத்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல், தாடிக்கொம்பு, உலகம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கண்டுகளித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் உலகம்பட்டியை சேர்ந்த இன்னாசிமுத்து (வயது40), பூலாம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (23) உள்பட 7 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story