சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை


சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை
x
தினத்தந்தி 23 Jan 2020 4:30 AM IST (Updated: 23 Jan 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை கூறினார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி முகாம் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசிய தாவது:-

உள்ளாட்சி நிர்வாகத்தில் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டம் இயற்றினார். இன்று அதிக அளவிலான பெண்கள், உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கிராம ஊராட்சிகளுக்கு போதிய நிதி வழங்கி சிறப்பான முறையில் கிராம ஊராட்சிகள் செயல்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

கிராம ஊராட்சிகள் மூலமாக பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், தூய்மை கிராம இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டுதல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது ஒரு லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு கிராம சாலைகள் இருந்தன. தற்போது கூடுதலாக 45 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நாட்டிலேயே அதிக அளவில் நிதி ஓதுக்கீடு பெற்று தமிழ்நாட்டில் செயல்டுத்தப்பட்டு வருகிறது.

இதை பாராட்டி மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை கொண்டு 9 லட்சம் சுய உதவிக்குழுக்கள் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

நமது மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு எல்லாம் உறுதுணையாக கிராம ஊராட்சிகள் ஒத்துழைத்திட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் மக்களின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றும் வகையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், சுத்தமான கிராமம் ஆகிவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஊராட்சிக்கான வருவாயாக விளங்கும் வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை முறையாக வசூலித்து நிதியை பெருக்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்க ளுக்கு பயிற்சி கையேடுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.சாந்திமதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் டி.கே. அமுல் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட அலுவலர் செல்வராசு, உதவி இயக்குனர் என்.உமாதேவி, ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் பசுபதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story