இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு பெண்மையை போற்றுதல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு பெண்மையை போற்றுதல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 22 Jan 2020 10:15 PM GMT (Updated: 22 Jan 2020 8:27 PM GMT)

இந்து ஆன்மிக கண்காட்சியின் முன்னோட்டமாக பெரியோர், ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல் உள்ளிட்ட 6 கருத்துகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் ரதங்களில் செல்பவர்கள் விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.

சென்னை, 

சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வரும் 28-ந்தேதி தொடக்க விழாவுடன் தொடங்கி பிப்ரவரி 3-ந்தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை மாதா அமிர்தானந்தமயி தொடங்கி வைக்கிறார். 29-ந்தேதி முதல் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பராமரித்தல், ஜீவராசிகளை பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையை போற்றுதல், நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய 6 கருத்துக்களை வலியுறுத்தி இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பெண்மையை போற்றுதல் என்பது இந்த ஆண்டு கண்காட்சியின் தலைமைக் கருத்தாக திகழ்கிறது.

இதனை பள்ளி மாணவர்கள் கடைப்பிடிக்கும் வகையில் விவேகானந்தர் ரதங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்காக சென்று வருகின்றன. அத்துடன் கண்காட்சிக்கு பொதுமக்களை ஈர்ப்பதற்காகவும், அதன் பின்னணியில் உள்ள தத்துவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேற்கு தாம்பரம் சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளிக்கு விவேகானந்தர் ரதம் சென்றது. இதனை பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மலர் தூவி வரவேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார். விவேகானந்தர் தொடர்பான பக்திப்பாடல்களை மாணவிகள் ஒரே குரலில் பாடினர். இக்காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி மற்றும் பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

Next Story