மும்பையில் 27-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், ஓட்டல்களை இரவு முழுவதும் திறந்து வைக்கலாம் மந்திரி சபை ஒப்புதல்
மும்பையில் 27-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், ஓட்டல்களை இரவு முழுவதும் திறந்து வைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை,
மும்பையில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று 2013-ம் ஆண்டு முதல் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே வற்புறுத்தி வந்தார். தற்போது அவரது தந்தை உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைந்து, அதில் சுற்றுலாத்துறை மந்திரியாக பதவி வகித்து வரும் ஆதித்ய தாக்கரே இரவு வாழ்க்கை திட்டத்தை அமல்படுத்த முனைப்பு காட்டினார்.
அதன்படி குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதிக்கப்படும் என சமீபத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.
மந்திரி சபை ஒப்புதல்
இதுகுறித்த தீர்மானம் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது குடியரசு தினத்திற்கு அடுத்த நாளான 27-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்க மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது.
பின்னர் மந்திரி ஆதித்ய தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியிருப்பு அல்லாத பகுதிகள்
இரவில் சிறந்த முறையில் தொழில் செய்ய முடியும் என்று நம்புபவர்கள் மட்டுமே 24 மணி நேரமும் தங்கள் நிறுவனங்களைத் திறந்து வைக்க முடியும். அதன்படி முதல் கட்டமாக குடியிருப்பு அல்லாத பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள் மற்றும் மில் வளாகங்களில் உள்ள கடைகள், உணவகங்கள், தியேட்டர்கள் இரவு முழுவதும் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் என்.சி.பி.ஏ. அருகில் உள்ள நரிமன் பாயிண்ட் பகுதிகளில் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த திட்டம் அமலை தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை, ஒலிமாசு வரம்புகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உணவுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். தவறு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
சுற்றுலா பயணிகள்
இந்த இரவு வாழ்க்கை திட்டத்தால் போலீசார் அதிக பணி அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். காரணம் இதுவரை அவர்கள் அதிகாலை 1.30 மணிக்கு பிறகு கடைகள் திறந்திருக்கிறதா என கண்காணித்துகொண்டு இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் சட்டம்-ஒழுங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.
இதன்மூலம் இரவு முழுவதும் ஓட்டல்களில் மக்களுக்கு உணவு கிடைக்கும். ஷாப்பிங் செல்லவும், சினிமா பார்க்கவும் முடியும்.
மும்பை 24 மணி நேரமும் இயங்கும் நகரம். இங்கு மக்கள் இரவு வேலைக்கு செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். இரவு 10 மணிக்கு மேல் அவர்களுக்கு பசி எடுத்தால் எங்கே செல்வார்கள்?. இதனால் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
மதுபான பார்கள்
வணிக வளாகங்கள் மற்றும் மில்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகள் இருப்பதால் பிரச்சினை எதுவும் இல்லை. இரவு நேரத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணம் செலுத்தவேண்டி இருக்கும்.
அதே நேரத்தில் ‘பப்’ என்று அழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் மற்றும் மதுபான பார்கள் வழக்கம்போல் அதிகாலை 1.30 மணிக்கு மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story